ஜனவரி 27-2011 அன்று
சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் உயர் நீதிமன்றங்கள் அநியாய தீர்ப்பு வழங்கினாலும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லும் விதமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிரான சென்னை & மதுரை கண்டனப் பேரணி & ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக....
சேலத்தில் கூடிய மாநிலப் பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 30-01-11 ஞாயிறன்று சேலத்தில் உள்ள நேரு கலையரங்கத்தில் கூடியது. காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 9மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு நடைபெற இருந்த அரங்கை நிறைத்தனர். குறிப்பிட்டது போல் சரியாக காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமானது. பொதுக்குழுவிற்கு மாநில மேலாண்மைக் குழு தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் தலைமையேற்று முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “மார்க்க அறிவுரை” வழங்கினார்.
மாநிலத் தலைவர் உரை:
அவர் தனது உரையில் ஷைத்தான் எப்படியெல்லாம் நம்மை வழி கெடுப்பானோ அங்கெல்லாம் எந்த அளவிற்கு கவனமாக நாம் நடக்க வேண்டும் என்ற உபதேசத்தைச் சொல்லிக் காட்டுகின்றது. அந்த அடிப்படையில், பொறுப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு, பொறுப்பு வகித்துவிட்டு அந்தப் பொறுப்பிலிருந்து இறங்கும் போது ஷைத்தான் வழி கெடுக்கின்றான். அப்படிபட்ட நிலைமை ஏகத்துவப் பணியை மேற்கொள்ளும் நமது நிர்வாகிகளிடம் வந்துவிடக் கூடாது. அது போன்று உறவுகளை அரவணைக்கின்றோம் என்ற பெயரில் மர்க்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் மார்க்கத்தை மீறி நடக்கக் கூடிய வைபவங்களில் கலந்து கொண்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளை சிலர் மீறுகின்றனர். அந்த நிலையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு மார்க்க விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது உறவினர்களுக்கு மத்தியில் நடந்து கொண்டார்கள் என்ற செய்திகளைப் பட்டியலிட்டார்.
TNTJ ன் தேர்தல் நிலைபாடு:
அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் பொதுக்குழு உறுப்பினர்களிடத்தில் விளக்கினார்.
ஆரம்பம் முதலே அதிமுக தரப்பு நமது ஜமாஅத்தை அணுகி ஆதரவு கேட்டதையும், கடந்த 22-01-11 சனிக்கிழமையன்று மீண்டும் நம்மை நமது அலுவலகத்தில் வந்து சந்தித்ததையும் விளக்கினார். அப்போது அதிமுக தலைவரிடம் கொடுப்பதற்காக ஜமாஅத் சார்பில் அதிமுக பிரதிநிதிகள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பியதையும் விளக்கி விட்டு அந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்துக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து, திமுக தரப்பு நம்மை அணுக, ஒரு இயக்கமாக உங்களை ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் உங்களை எதிர்த்து வேலை செய்வதாகத் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களுக்கு செய்யக் கூடிய அநியாயங்களை நாங்கள் போராட்டங்களின் வாயிலாக எதிர் கொள்கின்றோம். இனிவரும் காலங்களிலும் போராடியே பெற்றுக் கொள்வோம். ஆனால் சமுதாய மக்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும். எங்கெளுக்கென்ற தனிப்பட்ட முறையில் எங்கள் நலனுக்காக நாங்கள் எதையும் ஒரு போதும் கேட்பதில்லை என்று விளக்கி கீழ்க்கண்ட இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைக்கப்பட்டன.
1.முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தமிழகத்தில் போதிய அளவாக இல்லை. அதனை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
2.முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகத்தைச் சரி செய்யவும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக சென்றடைகின்றதா என்பதைக் கண்காணிக்கவும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
கையில் காசு – வாயில் தோசை:
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது.
கடந்த தேர்தலின் போதே இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகங்களைச் சரி செய்வோம் என்று நீங்கள் எழுதித் தந்தும் அதைச் சரி செய்யவில்லை. எனவே, அப்படி சொன்னால் முஸ்லிம்கள் அதை ஏற்க மாட்டார்கள். மேலும், ரங்கநாத் மிஸ்ரா தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதனால் நீங்கள் வழங்கும் 5% என்பது அவரது பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவு தான். எனவே உடனடியாக நாங்கள் அதை சட்டமாக்க முடியாது என்றும் நீங்கள் சொல்ல முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
நிலைமை சீராகாவிட்டால் செயற்குழுவில் முடிவு:
எனவே வரக்கூடிய தேர்தலில், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டைச் சாட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குகின்றதா? என ஒப்புதல் கேட்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தக்பீர் முழங்கி அதை ஆமோதித்தனர்.
ஏகத்துவக் கொள்கையை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட ம.ம.கட்சி எந்த அணியில் நின்று போட்டியிட்டாலும் அவர்களைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும், மற்ற கட்சிகளுக்கான நிலைப்பாடு குறித்து மாநில செயற்குழுவில் முடிவெடுப்பது என்றும் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.